‘There is grandeur in this view of life … that from so simple a beginning endless forms most beautiful and most wonderful have been, and are being, evolved.’
 ‘ஒரு எளிய தொடக்கத்திலிருந்து எண்ணில் அடங்கா வடிவங்களில் அழகானவையும், அற்புதமானவையும் பரிணமித்தன, பரிணமித்துக்கொண்டு இருக்கின்றன என்ற உயிர் பற்றிய இந்தப் பார்வைதான் எத்தனை விசாலமானது. – சார்லஸ் டார்வின்’

உயிரினங்களின் தோற்றம் குறித்து (On the origin of species) என்ற சார்லஸ் டார்வினின் புகழ்பெற்ற நூலில் இருந்து.

இந்த உலகில் உள்ள உயிரினங்கள் எல்லாம் – மனிதர்களாகிய நம்மையும் சேர்த்து – எப்படித் தோன்றின என்று நாம் அனைவருமே ஒரு முறையாவது வியந்திருப்போம். எத்தனை எத்தனை வடிவங்கள். அமைதியாக நகரும் நத்தை. மானை அடித்துத் தின்னும் புலி. மரங்கள் செடிகள் கொடிகள். அழகிய நிறங்களில் கண்ணைப் பறிக்கும் பூக்கள், அவற்றின் மணம். எல்லாம் நம் மனதைக் கொள்ளை கொள்கின்றன.

உயிரினங்கள் எப்படித் தொன்றின? எல்லாம் ஒரே நேரத்தில் தோன்றினவா? உயிர்களின் தோற்றத்துக்கும் இருப்புக்கும் பின்னால் என்ன நோக்கம் இருக்க முடியும்.

மனிதனின் வரலாறு முழுவதுமே இந்தக் கேள்வியும், வியப்பும் இருந்திருக்கிறது. இது பற்றிய மனிதனின் புரிதலும் காலந்தோறும் மாறி வந்திருக்கிறது. எனினும் நூற்று ஐம்பது வருடங்களுக்கு முன்புதான் இது பற்றிய ஒரு தெளிவான பார்வை தோன்றியது என்றால் அது மிகையல்ல. சார்லஸ் டார்வினின் பரிணாமக் கொள்கை உயிர்களின் தோற்றம் பற்றிய புதிரை விடுவித்தது. இக்கொள்கை சிந்தனையாளர்களிடம் ஏற்படுத்திய தாக்கத்தை, புகழ்பெற்ற பிரிட்டிஷ் விலங்கியலாளரான ஜி.ஜி.சிம்சன், “1859க்கு முன்னர் இந்தக் கேள்விக்கு பதிலளிக்க செய்யப்பட்ட முயற்சிகள் அனைத்தும் ஒன்றுக்கும் உதவாதவை; சொல்லப்போனால் அவற்றை கண்டுகொள்ளாமல் விட்டு விடுவதே நல்லது” என்று கூறுவதை வைத்துப் புரிந்து கொள்ளலாம். 1859இல்தான் டார்வின் பரிணாமக் கொள்கையை பதிப்பித்தார்.

டார்வினின் இயற்கைத் தேர்வுக் கொள்கையை இவ்வாறு சொல்லலாம். ஒரு குட்டி தோன்றும்போது அது அதன் பண்புகளைப் பெற்றோரிடமிருந்து பெறுகிறது. அவ்வாறு பெற்றோரிடமிருந்து குட்டிக்குக் கடத்தப்படும் பண்புகள், பெற்றோருடையதை பெரும்பாலும் முழுமையாக ஒத்திருப்பினும், சில நேரங்களில், சில குட்டிகளில், சின்னஞ்சிறு மாற்றங்களுடன்  கடத்தப்படுகின்றன. இந்த மாற்றம் புதிய குட்டி வாழவும், அது புதிய குட்டிகளைப் போடவும் உதவினால், அந்தக் கூட்டத்தில் பல்கிப் பெருகும்; அதாவது நீண்ட காலத்தில் அந்த மாற்றமடைந்த பண்பைக் கொண்டவர்கள் நிறைய பேர் அந்த உயிரிக் கூட்டத்தில் இருப்பர். இந்த மாற்றம் ஒரு வேளை நேரெதிராக குட்டியின் வாழ்க்கைக்கும், இனப்பெருக்கத்துக்கும் தீது செய்யுமானால் அந்த கூட்டத்தில் இருந்து அருகி மறையும்.

டார்வினுக்கு முன்னர் இந்தப் பெருங்கேள்வியை சிந்தனையாளர்கள், தத்துவஞானிகள் எப்படி எதிர்கொண்டார்கள் என்று காண்பது ஆர்வமூட்டுவது. டார்வின் ஒன்றும் தனது கொள்கையை தனி மனிதராக வந்தடைந்துவிடவில்லை. அவரது  சிந்தனையும் கொள்கையும் அவருக்கு முந்தைய சிந்தனையாளர்களின் தொடர்ச்சிதான். உண்மையில் டார்வின் அவரது பரிணாமக் கொள்கையைப் பதிப்பித்திருக்காவிட்டாலும், இந்தப் புரிதலை வேறொருவர் வந்தடைந்திருப்பார் என்பதே உண்மை. உண்மையில் அப்படித்தான் நடந்தது. டார்வின் பரிணாமம் பற்றிய புரிதலை அடைந்த பின்னரும் வெகு காலமாக அதைப் பதிப்பிக்கவில்லை. ஆல்ப்ரட் ரஸ்ஸல் வாலஸ் என்ற இன்னொரு இளைஞரும் டார்வின் வந்தடைந்த அதே முடிவுகளுக்கு தன்முயற்சியாகவே வந்தடைந்தார். இதை அறிந்த பின்னரே, டார்வின் தனது கொள்கையை பதிப்பிக்க விரைந்தார். இவை காட்டுவது என்ன? இந்த சிந்தனைச் செழிப்பு ஒரு சமூக இயக்கம். தனி மனிதர்களின் பங்கு அடுத்த நிலையை நோக்கி நகர உதவுவதே ஆகும்.

ஆக்கல் கொள்கை

மைக்கேலேஞ்சலோ ஓவியம்டார்வினுக்கு முன்னர்  இருந்த பொதுவான புரிதல் உயிரினங்கள் அனைத்தும் கடவுளால் படைக்கப்பட்டன என்பதாகும். இந்தப் பார்வையை புரிந்து கொள்ள 1802இல் வாழ்ந்த வில்லியம் பாலியின் வாதங்களை பார்க்கலாம். உயிரினங்களின் உடல் அமைப்பும், செயல்படும் விதமும் மிகவும் சிக்கலானதாக இருக்கிறது. இவ்வளவு சிக்கலானவை தானாகத் தோன்றி இருக்க சாத்தியம் இல்லை. நீங்கள் நடந்து செல்கிறீர்கள். ஒரு கல் உங்கள் காலைத் தடுக்கிறது என்க. அந்தக் கல் அங்குத் தானாகக் கிடக்கிறது என்று நினைப்பீர்கள். அது கல்லாக இல்லாமல் ஒரு கைக் கடிகாரமாக இருந்தால்? அதை யாரோ செய்து அங்கு விட்டுச் சென்றிருக்கிறார்கள் என்றுதானே நினைப்பீர்கள். ஏன் அவ்வாறு நினைக்கிறீர்கள்? ஏனென்றால் கல் ஒன்றும் சிக்கலான அமைப்பையோ செயல்பாட்டையோ கொண்டதல்ல. ஆனால் கடிகாரம் சிக்கலானது. நுண்ணிய செயல்களைச் செய்ய வல்லது. அதற்கென்று ஒரு நோக்கம் இருக்கிறது, மணியைக் காட்டவேண்டும். அதன் அமைப்பு அந்த நோக்கத்தை நிறைவேற்றும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது.  வில்லியம் பாலி உயிர்களின் அமைப்பையும், செயல்படும் விதத்தையும் ஒரு கடிகாரத்தினுடையவற்றுடன் ஒப்பிட்டு வாதிட்டார். கடிகாரம் என்று ஒன்று இருப்பதே அதை ஆக்கியவன் ஒருவன் இருப்பதற்கு சான்று அல்லவா? என்றார். எனினும் இதில் ஒரு சிக்கல் இருக்கிறது. ஆக்கியோன் என்று ஒருவன் உண்டு என்றால் அவனை ஆக்கியது யார்?. இதைத்தான் தத்துவஞானி டேவிட் ஹயூம் ஆக்கல் வாதத்துக்கு எதிராகக் கேட்டார். இதற்கு ஆக்கல் வாதம் தெள்ளிய பதிலைத் தரவில்லை.

முற்தோற்றம் ( preformation)

நீங்கள் சிறுவயதில் எப்படி இருந்தீர்கள். சிறிய ஆளாக இருந்தீர்கள். வயதாக ஆக பெரிய ஆளாக ஆனீர்கள். அதாவது எல்லா உறுப்புகளும் முன்பே இருந்தன. கால ஓட்டத்தில் அவை அளவில் பெரிதாகி உள்ளன. ஆகவே, உயிரி தோன்றும்போதே எல்லாவற்றையும் பெற்றிருக்கிறது, ஆனால் அவை கண்ணுக்குத் தெரியாத அளவில் சிறியதாக இருக்கின்றன. பின்னர் வளர்கின்றன. புதிய குட்டிகளும் ஒரு உறுப்பைப் போலத்தான் தாயிடம் வளர்கின்றன. எனவே, புதிய குட்டி அதன் தாய் பிறக்கும் போதே அதன் வயிற்றில் மிகச் சிறிய அளவில் தோன்றி இருக்க வேண்டும். எனவே ஒவ்வொரு உயிரியின் வயிற்றிலும் அவை ஈன இருக்கின்ற குட்டிகள் சிறிய வடிவிலும், அந்தக் குட்டிகளின் வயிற்றில் அவற்றின் குட்டிகளுமாக, எண்ணிலடங்கா மொத்த வழித்தோன்றல்களும் , ஏற்கெனவே தோன்றி இருக்க வேண்டும். எண்ணிலடங்கா உயிரிகளின் சிறிய வடிவங்கள் குறிப்பிட்ட வடிவத்தை உடைய ஒரு உயிருக்குள் அடைக்கப் பட்டு விட முடியுமா? இன்றைய காலத்தில் நமக்கு இது ஒரு சாத்தியமில்லாத ஒரு வாதமாக இருக்கலாம். ஆனால், பழங்காலத்தில், நுண்ணோக்கி ஆக்கப்படாமல் இருந்த காலத்தில், இந்தக் கருதுகோளை முழுமையாக ஒதுக்கி விட முடியவில்லை. உங்களுக்கு ஏற்கெனவே தெரிந்திருக்கும் – இந்த பழைய கருதுகோள் தவறுதான்.

உயிரின வகைப்பாடு

வெறும் வெள்ளைக்கருவும், மஞ்சள் கருவும் உள்ள முட்டையிலிருந்து சிக்கலான உறுப்புகளைக் கொண்ட கோழி தோன்ற முடிகிறது. எனவே, எளிய பொருள்களிலிருந்து சிக்கலான உயிரிகள் தோன்றுவது சாத்தியம்தான். எல்லா உயிரிகளும் முன்னரே தோன்றியிருக்க வேண்டும் என்று அவசியம் இல்லை. ஒவ்வொரு தலைமுறையிலும் புதிய வடிவங்கள் தோன்ற வாய்ப்புள்ளது. இவ்வாறு சென்றது அரிஸ்டாட்டிலின் பார்வை.

அரிஸ்டாட்டில் உயிரியலின் தந்தை என்று அழைக்கபடுகிறார். அவர்தான் தற்போதுள்ள அறிவியல் பூர்வமான உயிரியல் பார்வையின் தொடக்கப் புள்ளி. அவரது முக்கிய பங்களிப்பு உயிரின வகைப்பாடு ஆகும். அவர் உயிரினங்களை அவற்றின் வெளிப்புறப் பண்புகளை வைத்து – ஊர்வன, பறப்பன, பாலூட்டுவன என்று – பிரித்தார்.

லாமார்க்கின் கொள்கை

மர இலை உண்ணும் ஒட்டகச்சிவிங்கி உயிரினங்கள் எப்படித் தோன்றுகின்றன என்ற கேள்விக்கான நவீன தேடல் பாதிரியார் லாமார்க்-குடன் தொடங்குகிறது. ஒவ்வொரு உயிரினமும் இன்னொன்றிலிருந்து உருவாகி வந்ததாகவும், ஒவ்வொரு தலைமுறையிலும் சின்னஞ்சிறு மாற்றங்கள் தோன்றி, அவை கால ஓட்டத்தில் சேர்ந்து சேர்ந்து முந்தைய உயிரினத்திலிருந்து முற்றிலும் வேறுபடுமாறு  ஆக்கிவிட்டதாகவும் சொன்னார். உண்மையில் பரிணாமத்தை முதலில் கற்பித்தவர்[1] லாமார்க்தான்.

ஒவ்வொரு தலைமுறையிலும் ஏன் சின்னஞ்சிறு மாற்றங்கள் தோன்ற வேண்டும். லாமார்க் அந்தப் புதிய பண்பு நலன்களை அந்த உயிர்கள் முயற்சி செய்து பெற்றுக் கொள்கின்றன என்றார். ஓர் ஒட்டகச் சிவிங்கி மர இலையைத் திங்க கழுத்தை நீட்டி முயலும். இதனால் அதன் கழுத்து கொஞ்சம் போல நீளும். கழுத்தின் இந்த மாற்றம் அதன் குட்டிக்குக் கடத்தப்படும். இவ்வாறாக சில தலைமுறைகளில், ஒவ்வொரு தலைமுறையிலும் கொஞ்சம் கொஞ்சமாக நீட்டிக்கப்பட்ட கழுத்து நாம் இன்று பார்க்கும் வகையில் ஆனது என்றார்.

லாமார்க்கின் கொள்கை முழுவதும் சரி என்று சொல்ல முடியாது. என்ன தவறு என்று பின்னர் காண்போம். எனினும், பண்புகள் தலைமுறைகளிடையே கடத்தப்படுகிறது என்று முதலில்  கூறிய பெருமை அவரையே சாரும். கடத்தப்படும் விதம் பற்றிய அவரது விளக்கம் தவறாகும்.

இயற்கைத் தேர்வு

லாமார்க் விட்ட இடத்திலிருந்து தொடர்ந்து, கடத்தப்படும் விதத்தை தெளிவாக்கினார் டார்வின். 1830 இல் பீகிள் என்ற கப்பல் இங்கிலாந்து அரசால் வரைபடங்களை உருவாக்குதல் போன்ற பணிகளுக்காக தென் அமெரிக்கா உள்ளிட்ட இடங்களுக்கு பயணித்தது. இதன் கேப்டனாக இருந்த ராபர்ட் ஃபில்ட்ஸ்ராய்-யின் தோழராகவும், இயற்கையிலாளராகவும்  பயணிக்கும் வாய்ப்பு சார்லஸ் டார்வினுக்குக் கிடைத்தது. டார்வின் இயற்கையியலில் ஆர்வம் கொண்டிருந்தவராக இருந்தார்.அன்றைய ஐரோப்பாவில் இயற்கையை, குறிப்பாக விலங்குகளையும், தாவரங்களையும், ஆய்ந்தவர்களை இயற்கையியலாளர் – naturalist – என்று அழைத்தார்கள். மதம், கடவுள் ஆகியவற்றை படிப்பது இறையியல் -theology- ஆகும்.

டார்வினின் பறவை வகைகள்  இந்தப் பயணத்தின்போது அவர்கள்  சென்ற தீவுகளில் இருந்த பறவையினங்களைக் கண்டு டார்வின் ஆர்வங்கொண்டார். அவற்றுக்கு இடையில் இருந்த ஒற்றுமைகளையும், வேற்றுமைகளையும் காண்கையில், அவை அனைத்தும் ஒன்றுக்கொன்று தொடர்புடையன என்பது தெளிவானது. எனில் ஒவ்வொரு உயிரினமும், அவை அவை வாழும் சூழலுக்கு ஏற்ப தகவமைத்துக் கொண்டிருக்கின்றன. இது எப்படி நிகழ்கிறது?

பொதுவாக ஒரு உயிரினத்தின் மக்கட்தொகை பெருக்கல் மடங்கில் பெருக முயலும். ஆனாலும், ஒரு கட்டத்திற்குப் பிறகு, உணவு போன்ற தேவைகள் போதாமல் போவதால், அவ்வாறு பெருக முடியாது. எனவே, தனி உயிர்கள் இந்தத் தேவைகளுக்காக  போட்டியிடும். இதை ரொபர்ட் மால்தஸ் என்ற பொருளாதாரவியலாளர் விளக்கி இருந்தார். டார்வின் இந்த விதிகளை தன்னுடைய பிரச்சினையில் அப்பினார் ( apply – அப்பு).

இப்படி வாழ்வதற்காக தங்களுக்குள் போட்டி போட்டுக் கொண்டு இருக்கும் தனி உயிரிகளில் (தனி உயிரி – individual) ஏதேனும் ஒன்றில் அதன் கருவுருதலின்போது பெற்றோரிடமிருந்து பெரும் பண்புகளில் நிகழும் எந்த சிறு மாற்றமும் அந்த தனி உயிரி வாழவும், குட்டியிடவும் உதவுமானால் அடுத்தத் தலைமுறைக்குக் கடத்தப் படும். மாறாக அந்த மாற்றம் தீய விளைவுகளைத் தந்தால் அந்த மாற்றத்தைக் கொண்ட தனி உயிரி மற்றவைகளுடன் ஒப்பிட தோற்று அதிக குட்டிகளை இடாமல் இறந்து போகும். இவ்வாறு தீய விளைவுடைய மாற்றம் அடுத்த தலைமுறைகளுக்குக் கடத்தப்படுவது அருகி அந்த மாற்றமே மறைந்து ஒழியும். இவ்வாறாக இயற்கைச் சூழல் மாற்றம் உருவாகக் காரணமாக அல்லாமல் மாற்றம் தோன்றிய பின்னர் அது அடுத்த தலைமுறைக்குச் செல்ல வேண்டுமா, கூடாதா என்று தேர்வு செய்வதாக ஆகிறது. இந்த செயல்பாட்டில் இயற்கைக்கு என்று எந்த நோக்கமும் இல்லை என்பதை புரிந்து கொள்வது முக்கியமானது. கிராமங்களில் நெல் வயல்களில் பதரைப் பிரிக்க நெல்லை உயரத்திலிருந்து கொட்டுவர். எடை மிகுந்த நெல் கீழே விழும்.  எடை குறைந்த பதர் காற்று வீச்சில் இழுக்கப்பட்டு சற்று தள்ளி விழும். இதில் எப்படி காற்றுக்கோ அல்லது மொத்தமாக இயற்கைக்கோ எந்த நோக்கமும் இல்லையோ அதே போன்றே இயற்கைத் தேர்வில் மாற்றங்களைத் தேர்வு செய்வதில் எந்த நோக்கமும் இயற்கைக்கு இருப்பதில்லை.

 


 

— சுரேஷ் ஜீவானந்தம் | Suresh Jeevanandam

  • 1.0 —  24 September 2011
  • 1.1 — Add notes on Sexual selection, introduce genes

 


 

References:

  1. On the origin of species : Charles Darwin
  2. The Selfish Gene: Richard Dawkins
  3. 59 genetics ideas you really need to know : Mark Henderson

Leave a comment