‘There is grandeur in this view of life … that from so simple a beginning endless forms most beautiful and most wonderful have been, and are being, evolved.’
 ’ஒரு எளிய தொடக்கத்திலிருந்து எண்ணில் அடங்கா வடிவங்களில் அழகானவையும், அற்புதமானவையும் பரிணமித்தன, பரிணமித்துக்கொண்டு இருக்கின்றன என்ற உயிர் பற்றிய இந்தப் பார்வைதான் எத்தனை விசாலமானது. – சார்லஸ் டார்வின்’

உயிரினங்களின் தோற்றம் குறித்து (On the origin of species) என்ற சார்லஸ் டார்வினின் புகழ்பெற்ற நூலில் இருந்து.

இந்த உலகில் உள்ள உயிரினங்கள் எல்லாம் – மனிதர்களாகிய நம்மையும் சேர்த்து – எப்படித் தோன்றின என்று நாம் அனைவருமே ஒரு முறையாவது வியந்திருப்போம். எத்தனை எத்தனை வடிவங்கள். அமைதியாக நகரும் நத்தை. மானை அடித்துத் தின்னும் புலி. மரங்கள் செடிகள் கொடிகள். அழகிய நிறங்களில் கண்ணைப் பறிக்கும் பூக்கள், அவற்றின் மணம். எல்லாம் நம் மனதைக் கொள்ளை கொள்கின்றன.

உயிரினங்கள் எப்படித் தொன்றின? எல்லாம் ஒரே நேரத்தில் தோன்றினவா? அல்லது முதலில் ஒன்றோ சிலவோ தோன்றி, பின்னர் ஒன்று மாற்றம் பெற்று மற்றொன்றாகி, அதிலிருந்து பிறிதொன்று தோன்றி என்று தொடர்ந்து நிகழ்ந்து இன்றுள்ள நிலையை அடைந்தனவா?

உயிரினங்கள் தானாகத் தோன்றினவா? அல்லது யாராவது அவற்றைப் படைத்தார்களா?

உயிரினங்கள் தானாகத் தோன்றி இருக்க முடியுமா? இவ்வளவு சிக்கலான உடலமைப்பும், இயக்கமும் கொண்ட உயிரினங்கள் தானாகத் தோன்றுவது சாத்தியமற்றது இல்லையா?

உயிர்களின் தோற்றத்துக்கும் இருப்புக்கும் பின்னால் என்ன நோக்கம் இருக்க முடியும். நம்மைப் போல சிந்திக்கின்ற யாரோ ஒருவர் இவற்றைப் படைத்திருப்பாரோ? எனில் அவரை யார் படைத்தார்? அவர் தானாகத் தோன்றினாரா? அவர் தானாகத் தோன்ற முடியும் என்றால் உயிரினங்கள் ஏன் தோன்ற முடியாது?

உங்களுடைய கண் மூலம் உலகைக் காண முடிகிறது. காது ஓசையைக் கேட்க உதவுகிறது. இன்னும் முக்கியமாக காது நாம் எவ்வளவு சாய்ந்திருக்கிறோம் போன்ற தகவல்களை மூளைக்கு அளிக்கிறது. இதனால்தான் நாம் விழாமல் எழவும் உட்காரவும் நடக்கவும் ஓடவும் முடிகிறது. காதுக்குள் ஒரு திரவம் இருக்கிறது. நாம் நகரும்போதும் சாயும்போதும் அதற்கேற்ப அந்தத் திரவம் அசைகிறது. இந்த அசைவை காதில் உள்ள நரம்புகள் உணர்ந்து மூளைக்கு அனுப்புகின்றன. மூளை இந்தத் தகவலைப் பயன்படுத்தி நாம் விழாமல் இருக்க எந்தக் காலில் எந்த அளவ இயக்கம் தேவை என்று கணக்கிட்டு அதைக் கட்டளையாக கால்களுக்கு உரிய நரம்புகளின் வாயிலாக அனுப்புகிறது. இவ்வாறாக நாம் விழாமல் நடப்பது சாத்தியமாகிறது.

இப்படியாக ஒவ்வொறு உறுப்பும் சிக்கலான அமைப்புடன் சிக்கலான பல வேலைகளைச் செய்து அந்த உயிரினம் வாழவும், இனப்பெருக்கம் செய்யவும் உதவுகின்றன.

இவ்வளவு சிக்கலான உறுப்புகளின் தொகுப்பாக இருக்கும் உயிரிகள் தானாகவே தொன்றியிருக்க முடியுமா என்ன?

நீங்கள் ஒரு மலைப்பாதையில் தனியாக நடந்து செல்கிறீர்கள். ஏதோ யோசனையில் நடந்து செல்லும் உங்கள் காலில் ஏதோ தட்டியதால் கீழே பார்க்கிறீர்கள். அது ஒரு கல்லாக இருந்தால் அது அங்கு இயற்கையாகத் தோன்றி கிடக்கிறது என்று சொல்லலாம். அதுவே ஒரு கைக்கடிகாரமாக இருந்தால்? ஒரு கைக்கடிகாரம் இயற்கையாக தோன்ற முடியுமா? ஒரு கைக்கடிகாரம் இயற்கையாகத் தோன்ற முடியும் என்று சொல்ல முடிவதில்லை. ஏன்?


கல்லுக்கு என்று தனியாக ஒரு நோக்கமும் கிடையாது. ஆனால் கைக்கடிகாரத்துக்கு நேரத்தைக் காண்பிக்க வேண்டும் என்று ஒரு நோக்கம் இருக்கிறது. அந்த நோக்கத்தை முடிந்த அளவு செம்மையாக நிறைவேற்றுமாறு அதன் உள்ளமைப்பும் இயக்கமும் இருக்கிறது. கல்லுடன் ஒப்பிட கடிகாரம் சிக்கலான அமைப்பும் இயக்கமும் கொண்டது என்று சொல்லலாம். இப்படியாக தனித்த நோக்கத்தையும் சிக்கலான அமைப்பும் இயக்கமும் கொண்டன இயற்கையாகத் தொன்றி இருக்க முடியாது என்று ஆகிறது.

ஒவ்வொறு உறுப்பும் சிக்கலான அமைப்பும் இயக்கமும் தனித்த நோக்கமும் கொண்டன என்பதால் அத்தகைய உறுப்புகளின் தொகுப்பாக இருக்கும் உயிரி இயற்கையாக தோன்றி இருக்க சாத்தியமில்லை என்று ஆகிறது.

தான் தோன்றல் கொள்கை:
+ உயிரினங்கள் தானாகத் தோன்றின
– உயிரினங்கள் சிக்கலான அமைப்பும், இயக்கமும் கொண்டன. இத்தகையன தானாகத் தோன்ற சாத்தியம் குறைவு.

தானாகத் தோன்றுவது சாத்தியமில்லை என்றால் யாராவது படைத்தார்களா? இப்போது உயிரி தோற்றத்திற்கு படைப்பு மட்டும்தான் ஒரே மாற்று சாத்தியமா? காண்போம். முதலில் படைப்பு சாத்தியமா என்பதைக் காண்போம்.

உயிரினங்களை சக்தி மிகுந்த எல்லாம் வல்ல ஒருவர் படைத்தார் என்ற கொள்கை பல நூற்றாண்டுகளாக மனிதர்களால் நம்பப்பட்டு வந்தது. இன்றும் பலர் நம்புகின்றனர். பல மதங்கள் தங்களது புராணங்களிலும் புனித நூல்களிலும் இதை விரித்து விளக்கியுள்ளன.

உயிரினங்கள் ஒருவரால் படைக்கப்பட்டன என்றால் அந்த படைத்தவர் எப்படித் தோன்றினார். அவருக்கு நோக்கம் உண்டு ஆனால் உடல் இல்லை என்று சொல்லப்படுகிறது. பொதுவாக இவர் அல்லது இது கடவுள் என்று அறியப்படுகிறது. அவர் இயற்கையாகத் தோன்றினாரா? அவர் இயற்கையாகத் தோன்ற முடியும் என்றால் ஏன் உயிரிகள் தாங்களே இயற்கையாகத் தோன்றி இருக்கக் கூடாது.

கடவுளின் இருப்பு ஒரு அடிப்படை இயற்கை விதியாக இருப்பதே ஒரே சாத்தியம். எனினும் அப்படி ஒரு இயற்கை விதி இருக்கிறதா என்பதை நடைமுறை நிகழ்வுகளிலிருந்து பெறப்படும் ஆதாரங்களின் மூலமே மெய்ப்பிக்க முடியும். அப்படி ஏதும் ஆதாரங்கள் இதுவரை கிடைக்கவில்லை.

கடவுள் என்பவர் நோக்கத்தை மட்டும் உடையவர் – ஆனால் பரு உடலைக் கொண்டவரல்ல என்றால் பருப்பொருள் அல்லாத ஒன்று பருப்பொருளைக் கட்டுப்படுத்த முடியுமா என்ற கேள்வி எழுகிறது. பருப்பொருள் என்பது குறிப்பிட்ட நிறையும் இடத்தை அடைக்கும் பண்பும் கொண்ட அனைத்துமாகும். அதாவது நாம் நிஜ உலகில் காண்பன, உணர்வன அனைத்தும் பருப்பொருள்கள். உங்கள் கற்பனையில் மட்டுமே உள்ள ஒன்று நிஜத்தில் இருக்கின்ற பொருளில் மாற்றத்தை உண்டாக்க முடியுமா? இதற்கு நடைமுறை நிகழ்வு ஏதும் ஆதாரமாக இல்லை. எனவே உயிரினங்கள் கடவுளால் படைக்கப்பட்டன என உறுதியாக சொல்ல முடியவில்லை. அதுவே ஒரு அடிப்படை இயற்கை விதியாக இருந்தால் மட்டுமே படைப்புக்கொள்கை சாத்தியமாகும். வேறேதும் நடைமுறை நிகழ்வுகளுடன் பொருந்திப் போகிற ஒரு சாத்தியம் உண்டு என்றால் நாம் அதையே தேர்ந்தெடுக்க வேண்டும். (*rewrite)

படைப்புக் கொள்கை:
+ கடவுள் உயிர்களைப் படைத்தார்
+ கடவுளுக்கு நோக்கம் உண்டு. உடல் கிடையாது. எல்லாம் வல்லவர்.
– பரு உலகுடன் எந்தத் தொடர்பும் இல்லாத ஒன்று பரு உலகில் மாற்றம் செய்ய முடியும் என்பதற்கு ஆதாரம் இல்லை.
– ஒரே சாத்தியம் இது ஒரு அடிப்படை இயற்கை விதியாக இருப்பது மட்டுமே. எனவே ஏற்கெனவே நாம் கொண்டிருக்கும் அறிவியலால் எந்த விளக்கமும் சொல்ல முடியாவிட்டால் மட்டுமே இந்த சாத்தியத்தை மேலும் ஆயலாம்.

இதுவரை பார்த்தவரையில் உயிரினங்கள் தானாக தொன்றியிருக்கவோ படைக்கப்பட்டிருக்கவோ வாய்ப்பு குறைவு என்றாகின்றது. வேறு சாத்தியங்கள் எதுவும் இல்லை என்றால் மட்டுமே இவற்றை மேலும் நாம் ஆய்வோம்.

Leave a comment