ஈராண்டுகளுக்கு முன்னர் இது நடந்தது. எனது பையனுக்கு ஒன்றரை வயது இருக்கும். அவனது அத்தை மகனுக்கும் அதே வயது. இருவரும் சேர்ந்து விளையாடுவர்.

காரைப் பின்னாடி நகர்த்திவைப்பதைப் பார்ப்பது அவர்களுக்கு பெரிய வேடிக்கை. அப்போது எழுப்பப்படும் எச்சரிக்கை ஓசை, ஒருவர் பின்னே இருந்து கொண்டு பார்த்துப் பார்த்து, “வரலாம், வரலாம்” என்று கூறுவது, ஓட்டுனர் கவனமாக நாலாபுறமும் பார்த்து மெதுவாக வருவது, பின்னர் சக்கரத்தைத் திருப்பித் திருப்பி முன்னும் பின்னும் நகர்த்துவது, எல்லாமே வேடிக்கைதான்.

நமக்கு இது ஒன்றுமில்லாத விடயம். அவர்களுக்கு அப்படி இருக்காதாயிருக்கும்.

இரண்டு மூன்று பேர் சில விதிமுறைகளை, ஒரு protocol-ஐ ஏற்படுத்திக் கொண்டு,  தங்களுக்குள் ஒத்துழைத்து செய்து முடிப்பது அந்தச் சின்னஞ்சிறு மனிதர்களின் உள்ளங்களைக் கிளர்த்தி இருக்க வேண்டும்.

அவர்கள் இதைப் போலச்செய்து விளையாடினார்கள். ஒருவன் காற்றில் ஸ்டியரிங்கைத் திருப்புவான். ஒருவன் பின்னால் இருந்து கொண்டு வரலாம், வரலாம் என்பான். கார் எழுப்பும் எச்சரிக்கை ஒலியும் உற்சாகமாக வாயிலிருந்து எழும்பும்.

ஒருவன் “கக்கிக் காக்கி கீக்கீ” என்று பாடுவான். இன்னொருவன் “லில்லி லில்லி லில்லி” என்று ஒலி எழுப்புவான்.

இது எனக்கு வியப்பாயிருந்தது. அவர்கள் எழுப்பும் ஒலி எழுப்ப விரும்பும் ஒலியிலிருந்து பெரிதும் வேறுபட்டிருந்தது. அந்த வேறுபாடு சும்மா வேறுபாடு இல்லை.  காரிலிருந்து வரும் ஒலி analog signal ஆகவும் அவர்கள் எழுப்பிய ஒலி ஒருவகையில் digital ஆகவும் இருந்தது. அந்த டிஜிட்டல் சிக்னலின் பல்வேறு அனுமதிக்கப்பட்ட நிலைகளாக தமிழ் எழுத்துக்கள் இருந்தன. அதாவது, அவர்கள் எழுப்பிய ஒலி தமிழ் எழுத்துக்களை ஒருவர் எழுதி கொஞ்சம் ராகத்துடன் வாசித்தால் எப்படி இருக்குமோ அப்படி இருந்தது.

Drawing (1)

அவர்களுக்கோ வயது ஒன்றரை மட்டுமே. அவர்கள் இன்னும் தமிழின் எழுத்து வரிசையைக் கற்று அறியவில்லை. ஆனால் அவர்கள் செய்திருப்பதோ எழுத்து வரிசையைக் கற்றிருந்தால் மட்டுமே சாத்தியம். இந்த முரண்பாட்டுக்கு விடை என்ன?

நாம் பேசுவதைக் குழந்தைகள் தொடர்ந்து நினைப்பின்றி கவனிக்கிறார்கள். எந்த அளவுக்கு மேல் செல்லும்போது ஓர் ஓசை வேறுபாடு கவனிக்கத்தக்கதாகிறது என்பதை பல பேச்சுக்களை ஆராய்வதன் மூலம் மூளை நரம்பியல் மண்டலம் அறிகிறது. பிறந்து ஆறு மாதங்களுக்குள் தனது தாய் மொழியின் எழுத்து வரிசையை ஒவ்வொரு குழந்தையும் எந்த முயற்சியுமின்றி அறிந்து விடுகிறது.

பலருடைய பேச்சையும் கவனித்து நீங்கள் கூறுகிற “அம்மா”-வின் முதல் ஓசையும், இன்னொருவர் கூறுகிற “அக்கா”-வின் முதல் ஓசையும் ஒன்றாகக் கருதலாம் என்பதையும், “ஈட்டி” இன் முதல் ஓசையை முந்திய இரண்டிலிருந்தும் வேறுபட்டது என்பதையும் அறிந்து விடுகிறார்கள்.

நமக்குத் தெரியாத ஒரு மொழிப் பேச்சைத் தொடர்ந்து கேட்பதன் மூலம் அம்மொழியின் எழுத்துக்களை நம்மால் சொல்ல முடியுமா? இது மிகவும் கடினமானது. மிகப் பெரிய செயற்கை அறிவு நுட்பங்களால், பலர் முயன்று ப்ரோகிராம் எழுதி, இதனை செய்யலாம். இத்தனை கடினமான ஒரு செயல் ஒவ்வொரு குழந்தையின் மூளையிலும் பெரிதாக எந்த அலட்டலுமின்றி பிறந்து ஆறே மாதங்களில் நடந்து விடுகிறது.

இதை எதற்காகச் சொல்கிறேன் என்றால் மொழி என்பது எவ்வளவுக்கு மானுடத்துடனுன் பிணைந்திருக்கிறது என்று காட்ட. மொழியைக் கற்பது என்பது சைக்கிள் ஓட்டக் கற்பது போன்றதல்ல.

ஒரு மொழியை இயல்பாகக் கற்க அம்மொழி பேசுபவர்களால் சூழப்பட்டிருக்க வேண்டும். அவர்களின் எண்ண வெளிப்பாடுகளில் முங்க வேண்டும். ஆகவே, மொழி தனிமனித விடயம் அல்ல, அது மனிதப் பின்னலின் அங்கம்.

Drawing (2)

 

Leave a comment